வால்பாறை நகராட்சியில் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வில்லை
வால்பாறை நகராட்சியில் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வில்லை என்று தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை நகராட்சியில் தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வில்லை என்று தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நகராட்சி கூட்டம்
வால்பாறை நகராட்சி மன்ற கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் (பொறுப்பு) வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நகராட்சி 21-வது வார்டு உறுப்பினர் உமாமகேஸ்வரிக்கும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீட்டு வசதி வாரிய குழு உறுப்பினராக 3-வது வார்டு உறுப்பினர் வீரமணி தேர்வு செய்யப்பட்டதற்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:-
தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
வார்டு கவுன்சிலர் வீரமணி:- அனைத்து வார்டு பகுதியிலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. எந்த ஒரு இடத்தில் பழுதடைந்த தெருவிளக்கு மாற்றப்பட்டாலும், விரைவில் பழுதடைந்து விடுகிறது. எனவே வால்பாறை நகராட்சி நிர்வாகத்தில் தெரு விளக்கு பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் வினியோகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த கருத்துக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தலைவர் அழகுசுந்தரவள்ளி:- தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் நடைபெறக்கூடிய நகராட்சி மன்ற கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
வளர்ச்சி பணிகள்
கவுன்சிலர் இந்துமதி:- புதுக்காடு எஸ்டேட் பகுதி சாலை மிகவும் பழுதடைந்து விட்டது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கவுன்சிலர் மகுடீஸ்வரன்:- வார்டு பகுதியில் வளர்ச்சி பணிகளை தடையின்றி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளர் வெங்கடாசலம்:- பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டப்பணிகளுக்கான உத்தரவுகள் விரைவாக வந்து விடும்.
அதன் பின்னர் அனைத்து வார்டு பகுதியிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
தீர்மானங்கள்
பின்னர் கூட்டத்தில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, மார்க்கெட் பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பது, வடிகால் அமைப்பது, நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, சத்துணவு கூடங்களில் பராமரிப்பு பணிகள் செய்வது, கழிவுநீர் கால்வாய்கள் கட்டுதல், நகராட்சி மார்க்கெட் பகுதியில் கடைகளுக்கு மேற்கூரை பராமரிப்பு பணிகள் செய்வது மற்றும் வால்பாறை பகுதியில் உள்ள 45 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளை ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் வால்பாறை நகராட்சியிடம் ஒப்படைத்துள்ளதை ஏற்றுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.