செஞ்சேரி அரசு ஒழுங்குமுறை கூடத்தில் இன்று முதல் கொப்பரை கொள்முதல் நிறுத்தம்

செஞ்சேரி அரசு ஒழுங்குமுறை கூடத்தில் இலக்கை எட்டியதால் இன்று கொப்பரை தேங்காய் கொள்முதல் நிறுத்தப்படுவதாக அதிகாரி் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-28 21:30 GMT


சுல்தான்பேட்டை


செஞ்சேரி அரசு ஒழுங்குமுறை கூடத்தில் இலக்கை எட்டியதால் இன்று கொப்பரை தேங்காய் கொள்முதல் நிறுத்தப்படுவதாக அதிகாரி் தெரிவித்துள்ளார்.


கொப்பரை கொள்முதல் மையம்


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சுமார் 15 லட்சத்து 60 ஆயிரம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் பறிக்கப்படும் தேங்காய், இளநீர் ஆகியவை திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதுபோக தேங்காய்கள் களத்தில் உடைக்கப்பட்டு கொப்பரைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது.


இந்த நிலையில், தேங்காய் எண்ணெய் மில்கள் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோயில் வெளிமார்கெட்டில் அரசு கொள்முதல் மையங்களில் கொப்பரை கொள்முதல் விலையை விட கடந்த சில நாட்களாக கிலோவிற்கு சுமார் ரூ.33 வரை விலை குறைவாக உள்ளதால் சுல்தான்பேட்டை வட்டார தென்னை விவசாயிகள் செஞ்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்கள் கொப்பரை தேங்காய்களை விற்பனை செய்ய தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தனர்.


கொப்பரை கொள்முதல் நிறுத்தம்


செஞ்சேரி (மலையடிபாளையம்) ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60-க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. முதலில் கொப்பரை தேங்காயை 4 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் இது 3,300 டன்னாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் கொள்முதல் இலக்கு எட்டப்பட்டதால் இன்று (வியாழக்கிழமை) முதல் செஞ்சேரி அரசு ஒழுங்முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிறுத்தப்படுகிறது.


இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட மேற் பார்வையாளர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.


விவசாயிகள் கவலை


வெளிமார்க்கெட்டில் கொப்பரை கொள்முதல் விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்