கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம் - புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

புதுக்கோட்டை கலெக்டர் ஏப்ரல் 20-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2023-04-13 12:22 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், திருமயம் தாலுகா வி.லட்சுமிபுரம் பகுதியில் கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கியிருப்பதாகவும், அந்த பகுதியைச் சுற்றி சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், பழமையான சிவன் கோவில், பஞ்சாயத்து அலுவலகம், கிறிஸ்தவ ஆலயம் ஆகியவை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கல்குவாரி நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த சூழலில் கல்குவாரி நடத்த எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அரசு தரப்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டாட்சியர் தரப்பு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதைப் படித்த நீதிபதிகள், வட்டாட்சியர் கல்குவாரியைச் சுற்றி கோவில், குளங்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டர் அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. இவ்வாறு முரண்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

மேலும் இரண்டு அறிக்கையிலும் தேதி குறிப்பிடாமல் கையெழுத்து மட்டும் போடப்பட்டிருந்ததைப் பார்த்த நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். படித்த அதிகாரி இவ்வாறு எப்படி நடந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பினர். மேலும் மாவட்ட கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கையை கோர்ட்டு ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்த நீதிபதிகள், வரும் ஏப்ரல் 20-ந்தேதி புதுக்கோட்டை கலெக்டர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்