நலிவுற்ற கலைஞர்களின் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு

நலிவுற்ற கலைஞர்களின் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது-நடிகர் வாகை சந்திரசேகர் பேச்சு

Update: 2022-05-19 21:29 GMT

திருப்பரங்குன்றம்

நலிவுற்ற கலைஞர்களின் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நடிகர் வாகை சந்திரசேகர் பேசினார்.

கட்டுப்பாடு முக்கியம்

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தென் மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய அடையாள அட்டை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சப்தகிரி கூத்துப்பட்டறை தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சினிமா நடிகரும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவருமான வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலவாரிய அடையாள அட்டையை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, கலைஞர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். சிலர் வெளியில் இருந்து ஒற்றுமையை குலைப்பார்கள். அதற்காக நாம் உணர்ச்சி வசப்பட்டு ஒற்றுமையில் இருந்து விலகக்கூடாது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய 3-ல் கடமை, கண்ணியம் என்பது 2-வது தான். கட்டுப்பாடு என்பது தான் முதலாவது என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லி இருக்கிறார். கட்டுப்பாடு என்பது முக்கியமானதாகும். அவர்கள் மேடைக்கு வந்து தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறபோது வீட்டுக்கவலையை ஓரங்கட்டிவிட்டு பிறரை சந்தோஷப்படுவது தான் கலைஞர்களின் வாழ்க்கையாக இருக்கிறது.

10 ஆண்டு உதவி இல்லை

கடந்த 10 ஆண்டு காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு எந்ததொரு உதவியும் செய்யவில்லை. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தை கருணாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் அனைவருமே திரைப்பட துறையை சார்ந்தவர்கள். ஆகவே கலைஞர்களின் கஷ்டங்கள் தெரியும். 10 ஆண்டு கால கஷ்டங்களிலிருந்து கலைஞர்கள் மீட்கப்படுவார். நலிவுற்ற கலைஞர்களின் சிரமங்களை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலைஞர்களுக்கு தன்மானம், உணர்வு இருக்கிறது. 6 லட்சம் பேரில் முதற்கட்டமாக 3 லட்ச பேருக்கு நலவாரிய அட்டை, உதவிகள் கிடைக்க ஆன்லைனின் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மனிதன் தன் இருதயத்தை காப்பது போல தி.மு.க. ஆட்சி, கலை மற்றும் கலைஞர்களை பாதுகாக்கிறது. பொங்கல் விழா மற்றும் அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை ஆடல், பாடல், நடிப்பு நடனம் மூலம் கொண்டு செல்லலாம். அதன் மூலம் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதை உறுதிபடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்