மாநில கூடைப்பந்து போட்டி:சென்னை அணி சாம்பியன்
நாமக்கல்லில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை அரைஸ்அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. பெண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார் அணிக்கு முதல்பரிசு கிடைத்தது.
கூடைப்பந்து போட்டி
நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடத்தப்பட்டு வந்தது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 31 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
முதல் 3 நாட்கள் நாக்அவுட் முறையிலும், அடுத்த 2 நாட்கள் லீக் அடிப்படையிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள் பிரிவில் சென்னை அரைஸ், நாகர்கோவில் ஆசியன் கூடைப்பந்து அணி, தமிழ்நாடு போலீஸ் அணி, கோவை குமரகுரு அணி ஆகிய 4 அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை 0205 அணி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி, சென்னை ரைசிங் ஸ்டார், எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி என 4 அணிகளும் லீக் போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டன. இதில் அதிக புள்ளிகள் பெறும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை அணிக்கு முதல் பரிசு
அதன்படி ஆண்கள் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்ற தமிழ்நாடு போலீஸ் அணியும், சென்னை அரைஸ் அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 69 புள்ளிகளை பெற்று சம நிலையில் இருந்தன. எனவே கூடுதலாக 5 நிமிடம் கொடுக்கப்பட்டது. இறுதியாக சென்னை அரைஸ் அணி 82-க்கு 78 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. 2-ம் பரிசு தமிழ்நாடு போலீஸ் அணிக்கு கிடைத்தது.
இதேபோல் 3-வது மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி அணியும், நாகர்கோவில் ஆசியன் கூடைப்பந்து அணியும் மோதின. இதில் கோவை குமரகுரு கல்லூரி அணி 91-க்கு 74 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 3-வது பரிசை தட்டி சென்றது. நாகர்கோவில் ஆசியன் கூடைப்பந்து அணிக்கு 4-வது பரிசு கிடைத்தது.
ரைசிங் ஸ்டார் வெற்றி
பெண்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற சென்னை ரைசிங் ஸ்டார் அணியும், கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டியை தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
இதில் சென்னை ரைசிங் ஸ்டார் அணி 78-க்கு 63 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல்பரிசை பெற்றது. கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது.
இதேபோல் பெண்கள் பிரிவில் 3-வது இடத்திற்கான போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும், சென்னை 0205 அணியும் மோதின. இதில் சென்னை 0205 அணி 50-க்கு 32 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று 3-வது இடத்தை பிடித்தது. சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணிக்கு 4-வது பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழா
வெற்றிபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.40 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
இதில் நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் நடராஜன், சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி, துணை தலைவர் பரந்தாமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.