கனமழையால் குடியிருப்பு பகுதியை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்

திருப்பரங்குன்றம் அருகே கனமழையால் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் பேரையூரில் கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து விழுந்தன.

Update: 2022-08-01 20:26 GMT

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே கனமழையால் வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் பேரையூரில் கனமழைக்கு 5 வீடுகள் இடிந்து விழுந்தன.

வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் முல்லைநகர், குறிஞ்சிநகர், நேதாஜி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. மழைகாலங்களில் குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் நிலையூர் கண்மாய்க்கு செல்ல கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆக்கிரமிப்பால் கால்வாய் அடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது தொடர்மழை பெய்ததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வெளியேறவில்லை. குடியிருப்பு பகுதியில் ்வீடுகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி குளமாக மாறி உள்ளது. அதனால் குடியிருப்பு பகுதியில் இருந்து மழை நீரை கடந்து வருவதில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மதுரை திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் அருகே மீனாட்சி தெருவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது பெய்த மழைக்கு பூங்காவிற்குள் உட்காருவதற்காக புதிதாக போடப்பட்ட இருக்கைகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதை அதிகாரிகள் பார்வையிட்டு பூங்காவிற்குள் மழைகாலங்களில் மழைநீர் தேங்காதபடி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாநகராட்சி 98-வது வார்டில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கிழக்கு பள்ளி உள்ளது. தொடர் மழையால் இந்த பள்ளியில் சுவரில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் மழைநீர் கசிந்து ஈரத்தன்மை உள்ளது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். என்று ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரையூர்

பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று பேரையூரில் 22 மி.மீ. மழை பதிவானது. மழையால் முருகேஸ்வரி என்பவருடைய வீடு, உத்தபுரம் அருகே உள்ள தச்சப்பட்டியை சேர்ந்த ராஜா என்பவருடைய வீடு, சின்னகட்டளையை சேர்ந்த சின்ன வேம்படியான், சூரம்மாள், ஏ.கோட்டைப்பட்டியை சேர்ந்த கருப்பையா ஆகியோரின் வீடுகள் மழைக்கு இடிந்து விழுந்தது.

இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு பேரையூர் அருகே உள்ள மங்கள்ரேவ் முக்கு என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விட்டது. உடனடியாக அந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது.

மதுரையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் பல்வேறு இடங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது. இதனால் மாங்குளம், கள்ளந்திரி, கண்டமுத்துப்பட்டி பகுதிகளில் மரங்கள் சாய்ந்து மின் கம்பங்கள் சேதமாகின. இதை மின்வாரியத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்