எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தேர்வு எப்படி இருந்தது?-மாணவ-மாணவிகள் கருத்து

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் பாடத்தேர்வு எப்படி இருந்தது என்பது குறித்து புதுக்கோட்டையை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

Update: 2023-04-06 19:25 GMT

தேர்வு எளிதாக இருந்தது

புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திகா:- தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த தன்னம்பிக்கையால் பதற்றம் இன்றி தேர்வு எழுதினேன். ஒரு மார்க் கேள்வி மட்டும் சற்று கடினமாக கேட்கப்பட்டிருந்தது. மற்ற கேள்வி எளிதாக இருந்ததால் தேர்வு நன்றாக எழுதினேன்.

அரிமளத்தை சேர்ந்த கதிர்வேல்:- 10-ம் வகுப்பு தமிழ்தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. நாங்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் எங்களை விட பள்ளி ஆசிரியர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். ஆசிரியர்கள் எங்களுக்கு சிறந்த முறையில் பாடம் நடத்தியதால் தேர்வு குறித்த எந்தவித பயமும் இன்றி தேர்வு எழுதினோம்.

மாதிரி தேர்வுகள்

விராலிமலையை சேர்ந்த ஹரிணி:- தமிழ் பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. தேர்வில் வினாக்கள் புத்தகத்தில் இருந்தும், ஆசிரியர்கள் நடத்திய பாடங்களில் இருந்துமே அதிக அளவில் வந்திருந்தன. மேலும் பள்ளி ஆசிரியர்கள் பொதுத்தேர்வுக்கு முன்பாக அதிகளவில் மாதிரி தேர்வுகளை நடத்தினர். இதனால் பொதுத்தேர்வை எதிர்கொள்வதில் எனக்கு சுலபமாக இருந்தது. இருந்த போதும் அரசு பொதுத்தேர்வு என்பதால் பள்ளிக்கு வரும் வரை ஒருவித பதற்றம் இருந்தது. அதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அது எனக்கு மட்டுமின்றி அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் வினாவை வாசிக்கும் போது தேர்வு அறைக்குள் நுழைந்த போது இருந்த பதற்றம் குறைவதுடன் வினாவினை நன்கு படித்து அதற்கு சரியான பதிலை எழுதுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இதனால் தேர்வை நன்றாக எழுதியுள்ளேன்.

புதுக்கோட்டையை சேர்ந்த அனுரத்:- தமிழ் பாடத்தேர்வு எளிமையாக இருந்தது. அரசு பொதுத்தேர்வு என்பதால் பள்ளிக்கு வரும் வரை ஒருவித அச்சம் இருந்தது. தேர்வு எழுதுவதற்கு முன்பு வினாத்தாள் படிப்பதற்கு நேரம் ஒதுக்கியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தேர்வு அறைக்குள் நுழையும் போது இருந்த பதற்றம் தேர்வு எழுத தொடங்கியதும் குறைந்தது.

தேர்வு பயம் நீங்கியது

கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் விஜயபாலன்:- முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதுவதால் மனதில் அச்சம் இருந்தது. இதுவரை வகுப்பு ஆசிரியரின் கண்காணிப்பில் தான் தேர்வு எழுதினோம். தற்போது வேறு பள்ளி ஆசிரியர் கண்காணிப்பாளராக வந்திருந்தார். ஆனால் அவர் மாணவர்களுடன் சகஜமாக பேசி பயத்தை நீக்கினார். தமிழ் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. வினாத்தாளை படித்து பார்க்க, விடை எழுத, சரிபார்க்க என நேரம் வழங்கப்பட்டதால் பதற்றம் இன்றி தேர்வு எழுதினேன்.

அரிமளத்தை சேர்ந்த அட்சயா:- நாங்கள் படித்த பாடத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டன. கொரோனா பற்றி கட்டுரை கேட்கப்பட்டிருந்தது. அது பாடத்திட்டத்தில் இல்லை என்றாலும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. பயம், பதற்றம் இன்றி தேர்வு எழுதினோம். தினமும் எங்கள் பள்ளியில் காலை 1 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் தேர்வு குறித்து எந்தவித பயமும் இன்றி தேர்வு எழுதினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்