சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானம் திடீர் ரத்து
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9:40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல 186 பயணிகள் இருந்தனர்.;
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 9:40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்ல 186 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் வழக்கமாக இலங்கையில் இருந்து காலை 8:40 மணிக்கு சென்னை வந்து விட்டு மீண்டும் இலங்கை புறப்பட்டு செல்லும்.
இலங்கையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய இலங்கை விமானம் வந்து சேரவில்லை. இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய விமானமும் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனால் விமானத்தில் பயணிக்க தயாராக இருந்த 186 பயணிகள் அதிருப்தி அடைந்தனர். இந்த விமானம் மூலம் சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கை வழியாக சிங்கப்பூர், மலேசியா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல இருந்தனர்.
இந்த நிலையில், விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டதால் இலங்கை செல்ல இருந்த பயணிகளும், இலங்கையில் இருந்து பிற நாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகளும் விமான நிறுவன ஊழியர்களை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.