பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 3-ந் தேதி சிவகங்கையில் நடக்கிறது.

Update: 2023-10-22 18:45 GMT

பேச்சுப்போட்டிகள்

ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை), அனைத்துக் கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கும் தனித்தனியே வருகின்ற நவம்பர் 3-ந் தேதி சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

3 தலைப்புகள்

அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்பு திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 3-ந் தேதி காலை 8.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் காலை 9 மணியளவிலும் நடக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் ஆகிய 3 தலைப்புகளும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு சுதந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீல கொள்கை, நேருவின் வெளியுறவுக்கொள்கை ஆகிய 3 தலைப்புகளும் தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்பட்டுள்ளன.

பங்கேற்கலாம்

போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யலாம். இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பம் பெற்று மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

மேலும், விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ, அல்லது 04575-241487 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தமிழ் வளர்ச்சித்தறை இயக்குனர் நாகராஜன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்