முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-02-05 18:45 GMT

கூத்தாநல்லூர்:

தைப்பூச விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், சாமிக்கு பால் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டை முருகன் கோவில்களில் தைப்பூச விழாவில் பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருமக்கோட்டை வடக்கு தெருவில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

முன்னதாக சாமிக்கு அபிஷேக, ஆராதனை அலங்காரம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், பெண்கள் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுபோல் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், மூலவர் குருபகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. இதேபோல் நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், காசிவிசுவநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

கொரடாச்சேரி

கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் சுப்ரமணியசாமி கோவிலில் தைப்பூச விழா கடந்த ஆண்டு(ஜனவரி) 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினம்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி பல்லக்கு வெண்ணெய்தாழி மற்றும் வெட்டுங்குதிரை வாகன ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து 3-ந் தேதி தேரோட்டம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச விழா நேற்று நடந்தது. முன்னதாக ரிஷப வாகனத்தில் காவிரி கரை சென்று தீர்த்தம் கொடுத்தல் மற்றும் காவடி அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று வன்னி மரத்தடியில் சிம்மவர்ம அரசனுக்கு காட்சியளித்தல் மற்றும் பக்தர் காட்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) துவஜா அவரோகணமும், நாளை(செவ்வாய்க்கிழமை) விடையாற்றி சுந்தாபிஷேகமும் நடந்தது.

மன்னார்குடி

மன்னார்குடியில் உள்ள காளவாய்க்கரை சக்திவேல் கோட்டம் முருகன் கோவில், நடுவானிய தெரு பழனி ஆண்டவர் கோவில், ஐவர் சமாது சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி சித்தர் பீடம் ஆகிய கோவில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆலத்தம்பாடி

ஆலத்தம்பாடி பளையங்குடி அகத்தீஸ்வரர் கோவிலில் முருகன் தனிசன்னதியில் எழுருந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்த வருகிறார். நேற்று தைப்பூசத்தையொடடி முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புண்ணிய தீர்த்தம் கொடுக்கும் காட்சியும், இரவு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. பின்னர் பஞ்ச மூர்த்தி வீதி உலா நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்