சொத்துவரி உயர்வுக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் - அமைச்சர் கே.என்.நேரு

பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரி குறைந்த அளவே விதிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-28 15:41 GMT

சென்னை,

சொத்து வரி உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரி திருத்த தீர்மானத்திற்கு எதிராய் அதிமுக போராட்ட நாடகத்தை நடத்தி உள்ளது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியினை ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது, வாய் மூடி அமைதியாய் இருந்த பழனிசாமி இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவராய் வேடம் போடுவது வேடிக்கை.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15 ஆவது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு "ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும்" என நிபந்தனைகளை விதித்துள்ளது' . அதேபோல மத்திய அரசின் 'தூய்மை இந்தியா திட்டம்' மற்றும் அம்ரூட் 2.0 ஆகியவற்றுக்கும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஒருவேளை தமிழ்நாடு அரசு இதை கடைபிடிக்காத பட்சத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-26 வரை நமக்கு கொடுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் மானியம் ரூ.4,36,361 கோடி நிறுத்தி வைக்கப்படும், அதோடு தூய்மை இந்தியா திட்டம் , அமரூட் 2.0 திட்டம் ஆகியவற்றிற்கான நிதியும் ஒதுக்கப்படாது. மத்திய அரசு இப்படி கடுமையான விதிகளை 15வது நிதியாணையத்தின் மூலம் விதித்த போது, அவர்களோடு நட்புறவில் இருந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. தற்போது தமிழ்நாடு அரசு தான் சொத்து வரி உயர்வுக்கு காரணம் என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது. 

15வது நிதியாணையம் சொத்து வரி உயர்வைக் கட்டாயமாக்கியதன் காரணமாக வேறுவழியின்றி, தமிழ்நாட்டு மக்கள் மீது மாறா அன்பும் அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் மிக மிக குறைந்த அளவு சொத்து வரியினை உயர்த்த உத்தரவிட்டார். அந்த வகையில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் சொத்து வரியானது மிக மிக குறைந்தளவே விதிக்கப்பட்டு வருகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்