பூம்புகாரில் கடல் உள்வாங்கியது
மீனவர்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்தின் நடுவே நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.;
பூம்புகார்,
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது இன்று(வெள்ளிக்கிழமை) புயலாக மாறவாய்ப்பு உள்ளது. இந்த புயலுக்கு பெங்கல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை(சனிக்கிழமை) கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
இதனால் டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த நிலையில் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறங்குதளம் பகுதியில் கடல் திடீரென சிறிது தூரத்திற்கு உள்வாங்கியது. இதன் காரணமாக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் கடல் அலைகளின் தாக்கத்தால் மீன்பிடி இறங்கு தளத்தின் கான்கிரீட் தளத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் படகு தளத்தில் நிறுத்த முடியாமல் மீனவர்கள் படகுகளை மீன்பிடி துறைமுகத்தின் நடுவே நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமகாக 8-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.