காட்டு யானை துரத்தியதால் மரங்களில் ஏறி உயிர்தப்பிய தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு மரத்திலே இருந்தனர்.;

Update:2024-11-29 04:26 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தினமும் அழையா விருந்தாளிகளாக குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் அந்த எஸ்டேட்டின் 1-வது டிவிஷன் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் புதர்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு காட்டுயானை ஒன்று வந்தது. பின்னர் திடீரென தொழிலாளர்களை துரத்த தொடங்கியது. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடியே ஓட்டம் பிடித்தனர். அவர்களை காட்டுயானை துரத்தி வந்தது.

ஒரு கட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிக்க சில தொழிலாளர்கள் அங்குள்ள சில்வர் ஓக் மரங்களில் ஏறினர். இதை கண்ட காட்டுயானை அந்த மரங்களின் அடியிலேயே முகாமிட்டு நின்றது. ஆனால் தொழிலாளர்களோ, மரங்களை விட்டு கீழே இறங்கவே இல்லை. உயிரை கையில் பிடித்துக்கொண்டு மரத்திலே இருந்தனர்.

இதை மரத்தில் இருந்தபடியே ஒரு தொழிலாளி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு காட்டுயானை அங்கிருந்து சென்றது. அதன்பிறகே தொழிலாளர்கள் கீழே இறங்கி வந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்