ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று அரியலூர் மாவட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு, ரூபாய் 10, 20, 50, 100, 500, 2000 என பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதேபோல் நகரில் உள்ள காளியம்மன், மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் அரியலூர் மேலத்தெருவில் உள்ள படைப்பத்து மாரியம்மன் கோவிலுக்கு நேற்று, பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஆண்கள் அலகுத்தியும், பெண்கள் தீச்சட்டி ஏந்தியும், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் மார்க்கெட் தெரு, தேரடி, வெள்ளாழ தெரு வழியாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தா.பழூர், செந்துறை
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை நடைபெற்றது.
செந்துறை அருகே ராயம்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் அப்பகுதியில் உள்ள குளத்தில் அபிஷேகம் செய்துவிட்டு பால்குடம் ஏந்தி, ஊர்வலமாக சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.