316 விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 316 சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 316 சிலைகள் வைத்து வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களிலும் அதிகாலை முதல் விநாயகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் அமைந்துள்ள கோட்டைவாசல் விநாயகர், வல்லபை விநாயகர் மற்றும் டி.பிளாக் பகுதியில் அமைந்துள்ள மங்களவிநாயகர் கோவிலில் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று விநாயகரை வழிபட்டனர். இதுதவிர, வீடுகளில் களிமண் விநாயகர் வாங்கி வைத்து அவல், பொரி, கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் பழங்களையும் படைத்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
316 சிலைகள்
பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சிறப்பு அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதுதவிர, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் 316 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த சிலைகளுக்கு நேற்று அதிகாலை முதலே அந்தந்த பகுதியினரால் பல்வேறு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கொழுக்கட்டை, அவல், பொரி, பழங்கள் பிரசாதங்களாக வழங்கப்பட்டன.
இந்த சிலைகள் அமைந்திருக்கும் பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு பொதுமக்களும் திரளாக சென்று பூஜைகளில் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் அந்தந்த இடங்களுக்கு தகுந்தவாறு போலீசார் மற்றும் விழாக்குழு வினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூஜை ெசய்த முஸ்லிம்
ராமநாதபுரம் நகர் வண்டிக்காரத்தெரு பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலைக்கு நேற்று காலை வந்த முஸ்லிம் ஒருவர் சாம்பிராணி புகை போட்டு பூஜை செய்து மக்கள் நோய்களின்றி மனிதநேயத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டி பிரார்த்தனை செய்தார். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம் ஒருவர் இவ்வாறு விநாயகர் சிலைக்கு சாம்பிராணி காட்டி வழிபட்டது காண் போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
ஊர்வலம்
திருவாடானை சின்னத்தொண்டி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சதுர்த்தியை யொட்டி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. கோவிலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலம் விழா குழு தலைவர் தங்கராஜ் தலைமையில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று புதுக்குடி முனீஸ்வரர் கோவில் முன்பு உள்ள கடற்கரையில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாயல்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சாயல்குடி இந்து கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.