அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
கோத்தகிரியில் அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி,
கோத்தகிரி டானிங்டனில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில் ஆனி மாத அமாவாசை நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், கருப்புசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பூஜையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் பண்ணாரி மாரியம்மன் கோவில்களிலும் அமாவாசையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.கோத்தகிரி அருகே மஞ்சமலை கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. கோவில் திறந்து ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, அமாவாசை நாளான நேற்று கோவிலில் பண்டிகை நடைபெற்றது. இதையொட்டி கிராம மக்கள் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து முனீஸ்வரருக்கு படையலிட்டனர். தொடர்ந்து கிடா வெட்டி பலியிட்டு வழிபட்டனர். பின்னர் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது.