புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-30 20:24 GMT

சேலம்

புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு கடந்த வாரம் நடந்தது.

இந்த நிலையில் 2-வது சனிக்கிழமையான நேற்று சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவர் அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் சாற்றப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் மாலை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள், கடை வீதியில் உள்ள வேணுகோபாலசாமி, ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணசாமி ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சேலம் சின்னதிருப்பதி வெங்கடேசபெருமாள், உடையாப்பட்டி கோவிந்தராஜபெருமாள், நெத்திமேடு கரியபெருமாள், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் உள்ளிட்ட மாநகரில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

எடப்பாடி

எடப்பாடி அடுத்த வெள்ளைக்கரடு மலைக்கோவிலான திம்மராய பெருமாள் சன்னதியில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி பெருமாள் சாமிக்கு 108 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது.

திம்மராய பெருமாள் சன்னிதானத்தில் உள்ள பிரமாண்ட ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை அலங்காரங்கள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல் பழைய எடப்பாடி சென்றாய பெருமாள், மேட்டு தெரு சவுந்தரராஜ பெருமாள், எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள், பூலாம்பட்டி மாட்டு பெருமாள் மலைக்கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நங்கவள்ளி

நங்கவள்ளியில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி லட்சுமி நரசிம்மசாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சாமிக்கு அலங்கார பூஜை நடைபெற்று. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல மேச்சேரி கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள், அமரத்தானூர் பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள், மேச்சேரி எறகுண்டபட்டி ரங்கநாதர் பெருமாள், கைகாட்டி வெள்ளார் ராம பக்த ஆஞ்சநேயர், சோரகை மலை வேட்ராயப்பெருமாள், பெரிய சோரகை சென்றாய பெருமாள், வனவாசி மலை பெருமாள் உள்பட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

காருவள்ளி சின்ன திருப்பதி

இதேபோல் காருவள்ளி சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண கோவிலில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி காலை 5 மணி முதல் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கோவிலில் புரட்டாசி 5-வது சனிக்கிழமையான, ஐப்பசி மாதம் 4-ந் தேதி தேேராட்டம் நடைபெற உள்ளதையொட்டி இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் சபர்மதி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்டையாம்பட்டி

ஆட்டையாம்பட்டி அருகே வேலநத்தம் பாவடி மைதானத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் சாமிக்கு நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக லட்சுமி நாராயண பெருமாளுக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் துளசி மாலை உள்பட பலவிதமான வண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் திருக்கோடி தீபத்தை கோவிலைச் சுற்றி ஏந்தி வந்து, திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டு, மகா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு பல்லக்கில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத லட்சுமி நாரயணன் வீதி உலா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்