சென்னை: ஓடும் பேருந்தில் தகராறு.. நடத்துநர் கீழே விழுந்து உயிரிழப்பு

நடத்துநர் உயிரிழப்புக்கு காரணமான பயணியை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2024-10-24 17:29 GMT

சென்னை,

சென்னை மாநகர பேருந்தில் ஜெகன் என்பவர் நடத்துநராக பணிபுரிந்து வந்தார். இவர் இன்று எம்.கே.பி நகர் முதல் கோயம்பேடு செல்லும் 46G பேருந்தில் நடத்துநர் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேருந்தில் ஒருவர் மதுபோதையில் ஏறியுள்ளார். அந்த நபருக்கும், நடத்துநருக்கும் இடையே டிக்கெட் எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த கண்டக்டர் ஜெகன்குமார், கையில் வைத்திருந்த டிக்கெட் கொடுக்கும் எந்திரத்தால் கோவிந்தன் தலையில் அடித்ததாகவும், இதில் அவரது தலையில் காயம் அடைந்து ரத்தம் கொட்டியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன், கண்டக்டர் ஜெகன் குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் கண்டக்டர் ஜெகன்குமார் ஓடும் பேருந்தில் மயங்கி விழுந்தார். இதனால் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பேருந்தை நிறுத்திய டிரைவர், 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்டக்டர் ஜெகன் குமார் பரிதாபமாக இறந்தார். கோவிந்தன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்