பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி அமாவாசையையொட்டி பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சி
ஆடி அமாவாசையையொட்டி பொள்ளாச்சி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சிறப்பு பூஜை
ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய விடிய விடிய கோவில் நடை திறந்து இருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் பக்தர்கள் முதல் கால பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். மேலும் உச்சிபூஜை, சாயரட்ச பூஜை, தங்கமலர் அர்ச்சனை உள்ளிட்ட பூஜையில் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையொட்டி ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மதுரை, தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி திருப்பூர், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திதி கொடுத்து வழிபாடு
இதேபோன்று பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். குரும்பபாளையம் மாரியம்மன் கோவிலில் பால் உள்பட சிறப்பு அபிஷேகம், உச்சி கால பூஜை நடந்தது. மேலும் தங்க முலாம் பூசிய செப்பு கவசம் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை, விளக்கு பூஜை நடைபெற்றது.
மேலும் பத்ரகாளியம்மன், மாகாளியம்மன், கரியகாளியம்மன் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது மிக சிறந்ததாக கருதப்படுகிறது. அதன்படி பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆழியாற்றில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் ஆழியாற்றில் புனிதநீராடினர்.