திருநங்கைகள், நரிக்குறவர்கள் தேர்தலில் பங்கேற்பு செய்திட சிறப்பு குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் தேர்தலில் பங்கேற்பு செய்திடவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

Update: 2023-10-19 18:45 GMT

குறைதீர் கூட்டம்

இந்திய தேர்தல் ஆணையம் விளிம்பு நிலை பிரிவினர்களான திருநங்கைகள் நரிக்குறவர்கள் உள்ளிட்ட பழங்குடியினர்கள், பாலியல் தொழிலாளர்கள், ஆதரவற்ற பெண்கள், வீடற்றோர் மற்றும் காப்பகங்களில் தங்கியுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தேர்தலில் பங்கேற்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை எடுத்திட தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநங்கைகள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் தேர்தலில் பங்கேற்பு செய்திடவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது.

முகாமில் நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் பங்கேற்ற திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்கள் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் உத்தரவு

இதுதொடர்பாக நில எடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு தகுதியுள்ள அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்க முன்மொழிவு அனுப்பிட தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, நலிவுற்ற பிரிவினர்கள் அனைவரையும் தேர்தலில் பங்கேற்க செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், தகுதியுள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக அந்தந்த பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்திடவும், அவர்களது கோரிக்கைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர்கள் யுரேகா, அர்ச்சனா, தனி தாசில்தார் (தேர்தல்) விஜயராகவன், மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை மாவட்ட தொழில் மையம், மருத்துவம் மற்றும் சுகாதாரம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட வழங்கல் அலுவலர், தாசில்தார்கள், தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்