தனிப்படையினர் அதிரடி: கஞ்சா வழக்கில் 15 பேர் கைது

புதுக்கோட்டையில் கஞ்சா வழக்கில் 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 19 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-12-21 18:42 GMT

கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் போதை ஊசி விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் கஞ்சா வழக்கில் சமீபத்தில் 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15 கிலோ வரை கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கடந்த 12-ந் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கஞ்சா விற்பனைக்கு எதிராக ஆபரேஷன் 3.0 நடவடிக்கையில் தொடர்ந்து தனிப்படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர்.

19 ரவுடிகள் கைது

இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த 12-ந் தேதி திருச்சியை சேர்ந்த ரவுடி இளவரசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் திருச்சி, சிவகங்கை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருப்பினும் புதுக்கோட்டையில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார்.

இதில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் நோக்கில் 19 ரவுடிகளை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். மேற்கண்ட தகவலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்