கரூர் மாவட்டத்தில் 24 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள்
கரூர் மாவட்டத்தில் நேற்று 24 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
காய்ச்சல் முகாம்
தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் சமீபத்தில் காய்ச்சல் பரவுவதாக வரும் தகவலையொட்டி தமிழ்நாடு முழுவதும் பொது சுகாதாரத்துறையின் மூலம் 1000 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 நடமாடும் மருத்துவக் குழுக்களை கொண்டு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. காய்ச்சல் அதிகம் உள்ள இடங்களாக இருப்பின் 3 மருத்துவ முகாம்களும், பள்ளிகளாக இருப்பின் 3 முதல் 5 சிறப்பு முகாம்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரூர் மாவட்டத்தில் 24 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. இது ஒருவகையான இன்ப்ளுயன்ஸா வகை காய்ச்சல் ஆகும். இதன் அறிகுறி இருமல், சளி, லேசான காய்ச்சல், உடல் சோர்வு போன்றவையாக இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் முகாமில் தேவையான சிகிச்சை பெற்றுக் கொண்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு முழுமையாக குணமடையலாம்.
தடுப்பு பணிகள்
காய்ச்சல் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளித்தும், தேவைப்பட்டால் தொடர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு பணிகளான குடிநீர் சுத்தம் செய்தல், நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரினேசன் செய்தல் மற்றும் கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணி, பகுதி முழுவதும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும்.
எனவே, கரூரில் காய்ச்சல் உள்ளவர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளவும், தங்கள் வீட்டில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் காய்ச்சல் ஏற்பட்டிருப்பின், வீட்டிலேயே சுயமருத்துவம் பார்க்காமல் இந்த முகாமிற்கு அழைத்து வந்து விரைவில் குணமடைய செய்யவும், காய்ச்சல் நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
வெள்ளியணை
வெள்ளியணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பச்சபட்டியில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் நடமாடும் மருத்துவ குழு டாக்டர் சக்திவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார துறை பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்தனர். மேலும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் செய்தனர்.
நொய்யல்
வாங்கல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தவிட்டுப்பாளையம், கூலகவுண்டனூர், புகழூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் வட்டார டாக்டர் சுரேந்திரன் தலைமையில் செவிலியர்கள் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு வைரஸ் காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்தனர். காய்ச்சல்கள் உள்ளவர்களுக்கு பரிசோதனை அடிப்படையில் உரிய மருந்து மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம்களை மாவட்ட பூச்சியியல் வல்லுனர் சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.