அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க வட மாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் புகார் தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தொழில்துறையில் வளர்ந்து வரும் மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்களுக்கான பாதுகாப்பினையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியாகும் பொய்யான தகவல்கள் குறித்து தமிழக அரசு சிறப்பு கவனம் எடுத்து கண்காணித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக தனி சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு குழுக்கள் மூலம் புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களை ஆய்வு செய்து சரியான பணி சூழல் நிலவுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் புலம்ெபயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் உடன் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு (டோல் எண்: 18005997626 மற்றும் வாட்ஸ்-அப் எண்: 9444317862) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அச்சமின்றி திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினருக்கு உரிய உத்தரவிடப்பட்டு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.