மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கின

மின் இணைப்பில் பெயர் மாற்றத்திற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கின.

Update: 2023-07-25 19:18 GMT

தமிழக அரசு சார்பில் மின் நுகர்வோர்கள் எளிமையாக மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மின் மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமையில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் தொடங்கியது. பெரம்பலூர்-அரியலூர் கோட்டங்களில் உள்ள 25 மின் அலுவலக மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் பெரம்பலூர் நகர் பகுதியில் நடந்த முகாமில் உடனடி பெயர் மாற்றம் செய்து கொண்ட மின் நுகர்வோர்களுக்கு பெயர் மாற்றம் செய்ததற்கான ஆணையை பிரபாகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இதைத்தொடர்ந்து மேற்பார்வை பொறியாளர் அம்பிகா கூறுகையில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மின் கோட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேர் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது தமிழக அரசின் சார்பிலும் மின்வாரியத்தின் மூலம் பெயர் மாற்றத்தை எளிமைப்படுத்தும் வகையில் இந்த ஒரு மாத சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம் 60 ஆயிரம் பேருக்கு மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோர்கள் தேவையான ஆவணங்களை முகாம்களில் அலுவலர்களிடம் கொடுத்து உடனடியாக பெயர் மாற்றம் செய்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது கோட்ட செயற்பொறியாளர்கள் (பொது) சேகர், (பெரம்பலூர்) அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் (டவுன்) முத்தமிழ் செல்வன் (டவுன்), (கிராமியம்) செல்வராஜ் மற்றும் துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு முகாம்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்கு அரசு வேலை நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்