வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்- சிறப்பு செயலாளர்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசின் சிறப்பு செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசின் சிறப்பு செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
ஆய்வு கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அரசின் சிறப்பு செயலாளரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பேசியதாவது:-
நாகை மாவட்டத்தில் கடந்த 9.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 5.01.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்
நாகை மாவட்டத்தில் மொத்தம் 651 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மொத்தம் 5 லட்சத்து 51 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 247 ஆண்களும், 2 லட்சத்து 82 ஆயிரத்து 50 பெண்களும், இதர பிரிவினர் 22 பேரும் உள்ளனர்.
மேலும் 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 18 வயது நிரம்பியவர்கள் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். அதேபோல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது போன்ற பணிகளுக்காக சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறப்பு முகாம்கள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா மற்றும் தாசில்தார்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.