முட்டக்குத்தி சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் - பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதி
தேவகோட்டை அருகே முட்டக்குத்தி கிராமத்தில் உள்ள சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தேவகோட்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே முட்டக்குத்தி கிராமத்தில் உள்ள சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக தேவகோட்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சொர்ணகாளீஸ்வரர் கோவில்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சக்கந்தி ஊராட்சிக்குட்பட்டது முட்டக்குத்தி கிராமம். இந்த கிராமத்தில் கிராம தேவதை கோவிலாகவும், சுமார் 1500 ஆண்டு கால பழமை வாய்ந்த சொர்ணகாளீஸ்வரர், காளியம்மன், கருப்பர், மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் கொண்ட கோவில் உள்ளது. மிகவும் பழமையான கோவிலாக இருந்ததால் இங்கிருந்த சுவாமி சிலைகள் சிதலடைந்த நிலையில் இருந்தது.
இதையடுத்து இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மீண்டும் கோவில் புதிதாக உருவாக்குவதற்காக அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து தற்போது புதிய மகா மண்டபத்துடன் கூடிய கோவிலாக கட்டப்பட்டுள்ளது.
நாளை கும்பாபிஷேகம்
தற்போது இங்கு சுவாமி, அம்பாள், நாகர், கணபதி, முருகர், ஆஞ்சநேயர், நவக்கிரகம் உள்பட பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, தனபூஜை, ஸ்தூபி ஸ்தானத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று காலை தேவதா வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று(சனிக்கிழமை) காலை 8.15 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, புதிய விக்ரகங்களுக்கு கண்திறத்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு பூர்வாங்க பூஜைகளும், முதற்கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், கோ பூஜை, தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவில் மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவில் சுவாமிஜி ஸ்ரீமாதாஜி மற்றும் தேவகோட்டை ஜமீன்தாரும் திருப்பணியாளரும் ஏ.எல்.ஏ.ஆர்.எஸ்.எம். நாராயண செட்டியார் உள்பட கிராம மக்கள் கலந்து கொள்கிறார்கள். சிவகங்கை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று இரவு வள்ளி திருமணம் நிகழ்ச்சியும், நாளை காலை 11 மணிக்கு சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து நாளை காலை 6 மணி முதல் 10 மணி வரை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முட்டக்குத்தி கிராமத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவகோட்டை கீழவீடு ஏ.ஆர்.லெட்சுமணன் செட்டியார் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.