விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று திடீரென பா.ஜனதாவில் சேர்ந்தார்.

Update: 2024-02-25 08:14 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டுவிட்டு எதிரணிக்கு தாவி வருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று திடீரென பா.ஜனதாவில் சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் விஜயதரணி. சமீபகாலமாக காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த விஜயதரணி பா.ஜனதாவில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் விஜயதரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

இணைப்பு நிகழ்ச்சியின்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை விஜயதரணி செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

இதனிடையே கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

மேலும், விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு-க்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் விஜயதரணியின் பதவி விலகலை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அளித்த கடிதத்தை ஏற்பதாக அப்பாவு அறிவித்துள்ளார்.

ராஜினாமா ஏற்கப்பட்டதால் விளவங்கோடு தொகுதி காலி என விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தொகுதி காலி என அறிவிக்கப்பட்டால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்