ஓய்வூதிய நிலுவை தொகையை தராமல் அலைக்கழிப்பு மாநகராட்சி தூய்மை பணியாளர் மகன் தீக்குளிப்பு

தாயின் பணி ஓய்வூக்கு பின்னர் நிலுவை தொகையை தராமல் அதிகாரிகள் அலைக்கழித்ததால் மனமுடைந்த மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரின் மகன் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்.

Update: 2023-02-01 06:58 GMT

சென்னை தண்டையார்பேட்டை ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 43). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது தாய் ரேணுகா தேவி (60). சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் வசித்து வந்த ரேணுகாவுக்கு போதிய வருமானம் இல்லாததால் மிகவும் சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தனது ஓய்வு காலத்துக்கு பிறகு கிடைக்க வேண்டிய நிலுவை பணம் வந்தால் அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று ரேணுகா எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டலம் அதிகாரியிடம் ஓய்வு பெற்ற தினம் மூலம் ஓய்வுத் நிலுவை தொகையை பெற மனு அளித்திருந்தார். ஆனால் மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் 5 மாத காலத்திற்கு மேலாகியும் மனுவை பரிசீலிக்காமலும், நிலுவைத் தொகையை வழங்காமலும் ரேணுகாதேவியையும், கிருஷ்ணமூர்த்தியையும் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குளிர்பான பாட்டிலில் மண்எண்ணெயை நிரப்பி கொண்டு தண்டையார்பேட்டை அலுவலகத்துக்குள் யாருக்கும் தெரியாமல் வந்துள்ளார்.

அங்கு இரவு பணியில் ஊழியர்கள் பணியில் இருந்த நிலையில் அவர்களது முன்னிலையில் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி திடீரென தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி மண்டல அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தண்டையார்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற நிலுவை தொகை வழங்காததால் மனம் உடைந்த மாநகராட்சி பெண் துப்புரவு பணியாளரின் மகன் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்