ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை சுற்றி சோலார் மின்வேலி அமைப்பு

காட்டு யானைகள் தாக்குதலை தடுக்க ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-15 18:45 GMT

கூடலூர், 

காட்டு யானைகள் தாக்குதலை தடுக்க ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

காட்டு யானைகள் தாக்குதல்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சி அலுவலகம், அஞ்சலகம், நூலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து பேரூராட்சி அலுவலகம் மற்றும் நூலகம், அஞ்சலகம், அரசு பள்ளி கட்டிடங்களை அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன.

இதனால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள், மாணவ-மாணவிகள் மத்தியில் பீதி நிலவி வந்தது. வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டும் காட்டு யானைகள் வருகையை தடுக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்கவும், அலுவலகங்கள் தாக்குலில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு வளாகத்தைச் சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

சோலார் மின்வேலி அமைப்பு

இதையொட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தை சுற்றிலும் சோலார் மின்வேலி அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. தற்போது பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்தது. இதை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா நேற்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் முறையாக பராமரித்து காட்டு யானைகள் வராமல் தடுக்கும் வகையில் மின்வேலி செயல்பட வேண்டுமென உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, செயல் அலுவலர் ஹரிதாஸ், இளநிலை பொறியாளர் வின்சென்ட், பணி மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து பேரூராட்சிகளின் ஆணையர் உத்தரவின் பேரில், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து சமுதாய கழிப்பறைகளின் கழிப்பறைத் தொட்டிகளுக்கும் கம்பி வேலி அமைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு அறிவிப்பு பலகைகள் வைத்து மேற்கொள்ளப்பட்ட பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷாஆய்வு செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்