ஈரோட்டில் பட்டப்பகலில் துணிகரம்: நடந்து சென்ற தலைமை ஆசிரியையிடம் நகை பறிப்பு- மோட்டார் சைக்கிளில் தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
ஈரோட்டில் நடந்து சென்ற தலைமை ஆசிரியையிடம் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு
ஈரோட்டில் நடந்து சென்ற தலைமை ஆசிரியையிடம் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிப்பு
ஈரோடு பெரியார் நகர், சிதம்பரம் செட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் பிளாரன்ஸ் (வயது 71). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு இறை வழிபாட்டுக்கு தினமும் செல்வது வழக்கம்.
இதேபோல் நேற்று காலையும் இறைவழிபாட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.
அவரது அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த நபர் கீழே இறங்கி திடீரென பிளாரன்ஸ் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை வெடுக்கென பறித்தான்.
2 பேருக்கு வலைவீச்சு
இதனால் அவர், "திருடன், திருடன்" என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வருவதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். பறிபோன நகை 4½ பவுன் ஆகும்.
இதுகுறித்து பிளாரன்ஸ் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.