ஆந்திராவில் இருந்து கரூருக்கு லாரியில் 44 கிலோ கஞ்சா கடத்தல்: 6 பேர் கைது
ஆந்திராவில் இருந்து கரூருக்கு விற்பனைக்காக லாரியில் 44 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
லாரியில் சோதனை
கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பெரியார் வளைவு மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் லாரி ஒன்று நிற்பதாக கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கீதாஞ்சலி தலைமையில் போலீசார் அங்கு சென்று அந்த லாரியில் சோதனை நடத்தினர்.பின்னர் அதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
6 பேர் கைது
விசாரணையில், அவர்கள் கரூர் மொச்சகொட்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி (வயது 41), தேனி மாவட்டம் தேவாரம் மல்லிங்கர்கோவில் தெருவை சேர்ந்த ரூபன் ராஜ் (27), போடிநாயக்கனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சென்ராயன் (42), மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்த கஸ்தூரி (43), கவாஸ்கர், ஜீவானந்தம் என்பதும், அவர்கள் 6 பேரும் சேர்ந்து ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இருந்து மொத்தமாக 44 கிலோ கஞ்சாவை வாங்கி கரூருக்கு விற்பனைக்காக கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 44 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.