புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் சார்பில் போகி பண்டிகையை முன்னிட்டு மேயர் பிரியா புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.;

Update:2024-01-10 02:06 IST

சென்னை,

சென்னை மாநகராட்சியின் சார்பில் போகி பண்டிகையை முன்னிட்டு, புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தியாகராய நகர் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை மேயர் பிரியா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா பேசியதாவது:-

போகி பண்டிகை என்பது நமது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி, நமது மனதில் உள்ள வன்மங்கள், கோபங்கள் மற்றும் பகை போன்ற தீய எண்ணங்களை அகற்றும் வகையில் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் ரப்பர், டயர், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிப்பதனை தவிர்த்து, தங்கள் வீடுகளுக்கு குப்பை சேரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். பெற்றோர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு நீங்கள்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தியாகராய நகர் எம்.எல்.ஏ. கருணாநிதி, மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்