மானிய விலையில் சின்ன வெங்காய விதைகள்
மானிய விலையில் சின்ன வெங்காய விதைகள்
போடிப்பட்டி
மானிய விலையில் சின்ன வெங்காய விதைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமையலறை ராணி
தக்காளியைத் தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் உச்சம் தொட்டுள்ளது. காய்கறிகளின் விலை சரிவால் நிலை குலைந்திருந்த விவசாயிகளுக்கு இது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 200-ஐ தாண்டியுள்ள நிலையில் சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யும் போது விதைக்காகவே பெருமளவு செலவு செய்யும் நிலை உள்ளதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே மானிய விலையில் விதைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
தமிழர் உணவில் சின்ன வெங்காயத்துக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. சின்ன வெங்காயம் இல்லாத சமையலறையில் மணக்க மணக்க, சுவை மிகுந்த உணவுகளை சேமிப்பது சாத்தியமில்லை என்றே சொல்லலாம். எனவே வெங்காயத்துக்கு சமையலறையின் ராணி என்று செல்லப்பெயர் உண்டு. இதனால் ஆண்டு முழுவதும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் விஷயமாக உள்ளதால், போதிய விலை கிடைக்காத போது விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். இதனால் பல விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் தயக்கம் காட்டியதும், பருவநிலை மாறுபாட்டால் ஏற்பட்ட பயிர் சேதமுமே தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
மானிய விலை
சின்ன வெங்காய சாகுபடியைப் பொறுத்தவரை வெங்காய விதை மற்றும் விதை வெங்காயம் என 2 விதமான நடவு முறைகள் பின்பற்றப்படுகின்றன. விதை மூலம் சாகுபடி செய்வதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 2½ முதல் 3 கிலோ அளவுக்கு விதைகள் தேவைப்படும்.விதை வெங்காயம் மூலம் நடவு செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ வரை விதை வெங்காயம் தேவைப்படும்.முன்னதாக ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ. 30 முதல் 50 வரை விலை கொடுத்து வாங்கிய நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு ரூ. 180 வரை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. 3 மடங்கு விலை உயர்வால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரிக்கிறது. ஏற்கனவே உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் விலை உயர்ந்துள்ளது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே தோட்டக்கலைத்துறை மூலம் அரசு மானிய விலையில் வெங்காய விதைகள் மற்றும் விதை வெங்காயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.