சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வேல் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

Update: 2022-10-06 20:46 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. நாட்டில் வேறு எந்தக்கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார்.

உத்தரவு பெற்ற அந்த பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறினால் சாமியிடம் பூப்போட்டு கேட்டு அதன்பின்னர் பக்தரின் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப்பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வேல் வைத்து பூஜை

இந்த நிலையில் திருப்பூர் வெங்கமேடுவை சேர்ந்த கே.ஆர்.கார்த்திகேயன் (வயது 43) என்ற பக்தரின் கனவில் உத்தரவான 'வேல்' நேற்று முதல் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் நிறைபடி கம்பு வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் 'வேல் ஞானத்தை குறிக்கிறது. உலக மக்களிடத்தில் அங்ஞானம் மறைந்து ஞானம் பிறக்கும். உலக மக்கள் அனைவரும் மகிழ்வுடனும், மனநிம்மதியுடனும் வாழப்போவதை இறைவன் உணர்த்துகிறார். மேலும் இதனுடைய தாக்கம் வரும் நாட்களில் தெரியும்' என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்