சிவகாசி தீயணைப்பு நிலையம் தரம் உயர்வு

12 புதிய வீரர்கள் நியமிக்கப்பட்டதுடன் சிவகாசி தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2023-04-10 19:01 GMT

சிவகாசி, 

12 புதிய வீரர்கள் நியமிக்கப்பட்டதுடன் சிவகாசி தீயணைப்பு நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வாகனம்

தொழில்நகரமான சிவகாசியில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வந்த நிலையில் விபத்துகளின் போது இழப்புகள் அதிகளவில் இல்லாமல் தடுக்க வசதியாக தீயணைப்பு நிலையத்தை தமிழகஅரசு தரம் உயர்த்தி உள்ளது. ஏற்கனவே சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் உள்பட 34 பேர் பணியில் இருந்தனர். இவர்கள் தினமும் 12 மணி நேரம் சுழற்சி முறையில் பணி செய்து வந்தனர்.

இந்தநிலையில் தற்போது சிவகாசி தீயணைப்பு நிலையத்தை மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு நிலையமாக தமிழக அரசு தரம் உயர்த்தி உள்ளது. இதனை தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.45 லட்சம் செலவில் புதிய தீயணைப்பு வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது.

12 புதிய வீரர்கள் நியமனம்

இதில் சுமார் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து எடுத்து செல்ல முடியும். மேலும் 12 தீயணைப்பு வீரர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் 46 பேர் பணியில் உள்ளனர். இவர்களை கொண்டு தீ தடுப்பு பணிகளை விரைவாக செய்ய முடியும்.

மேலும் ரூ.45 லட்சம் செலவில் கொடுக்கப்பட்டுள்ள புதிய தீயணைப்பு வாகனத்தின் மேல் நின்ற படி தீயை அணைக்கும் வசதிகள் உள்ளது. எனவே முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனத்தில் நின்றபடி தீயை அணைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தெரிவித்தார். புதிய வாகனத்துக்கு நேற்று காலை பூஜை நடைபெற்றது.

இதில் துணை தாசில்தார் அருளானந்தம், மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் விவேகானந்தன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்