சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

கடலூர் அருகே உள்ள சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்

Update: 2023-05-04 18:45 GMT

ரெட்டிச்சாவடி

பிரம்மோற்சவ விழா

கடலூர் அருகே உள்ள சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா மற்றும் கருடசேவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணியளவில் லட்சுமி நரசிம்ம பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜை நடந்தது.

தொடர்ந்து லட்சுமி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

பின்னர் அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் மாட வீதிகள் வழியாக ஆடி அசைந்தபடி வந்து நிலையை அடைந்தது.

நரசிம்மர் ஜெயந்தி

தொடர்ந்து நரசிம்மர் ஜெயந்தியையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவை தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை மட்டையடி உற்சவம், இரவில் இந்திர வாகனத்தில் சாமி வீதி உலா, நாளை(சனிக்கிழமை) புஷ்பயாகம், நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) இரவு ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்