பசும்பொன் தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிப்பு
மண்டல பூஜையையொட்டி பசும்பொன் தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் தேவர் சிலை, முருகன் கோவில், விநாயகர் கோவிலில் கடந்த 28-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் தேவர், முருகன், விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் 48-வது மண்டல பூஜை தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், தங்கவேல், பழனி ஆகியோர் தலைமையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் குழுவினரால் நடத்தப்பட்டது. யாக சாலை பூஜை நடத்தப்பட்டு தேவர், முருகன், விநாயகர் சிைலகளுக்கு 22 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், ஆர்.தர்மர் எம்.பி. ஆகியோர் முன்னிலையில் தேவர் சிலைக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோவிலாங்குளம் அழகு சரவணன், வக்கீல் முத்துராமலிங்கம், கரிசல் புலி வாசுதேவன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சக்தி, வழிவிட்டாள் நகரச் செயலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டனர்.