கையெழுத்து இயக்க போராட்டம்
ஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது;
ஆலங்குளம்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும், அரசு ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான விருதுநகர் மாவட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய சுப்பிரமணியத்தின் மீது கடந்த கால ஆட்சியின்போது எடுத்த தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை முழுவதுமாக ரத்து செய்து அவருக்கு நிரந்தர ஓய்வு மற்றும் அதற்குரிய பணபலன்களை வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தி கையெழுத்து இயக்கப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய காகிதத்தில் ரத்தத்தின் மூலம் கைரேகை வைத்தனர். மேலும் சுப்பிரமணியத்திற்கு அரசு வழங்க மறுத்த நிதிகளை சங்க முடிவின் படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தென்காசி மாவட்ட துணைத்தலைவர் பழனி, வட்ட கிளைச்செயலாளர் அந்தோணி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கங்காதரன் ஆகியோர் தங்களது ஒரு நாள் ஊதியத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தென்காசி மாவட்ட தலைவர் பார்த்தசாரதியிடம் வழங்கினர். மேலும் அனைத்து அலுவலக ஊழியர்களும் நிதி வழங்கினர்.