கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.

Update: 2023-06-02 18:45 GMT

ஏர்வாடியில் மகான் சுல்தான் சையது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் மத நல்லிணக்க விழாவாக ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இஸ்லாமியர்களின் திருவிழாவாக இருந்தாலும் முத்தரையர்கள், நாடார்கள், ஆதிதிராவிடர்கள், யாதவர்கள் உள்பட பல்வேறு சமுதாயத்தினரும் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் மற்றும் விழாவில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பணியை செய்வது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருவதோடு அந்த சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையாகவும் கருதப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் கடந்த 31-ந் தேதி நடைபெற்றது. முத்தரையர் சமுதாய மக்களுக்கான பாரம்பரிய வழிபாட்டு உரிமையை தர மறுத்ததாகவும், காலம்காலமாக சந்தனக்கூடு திருவிழாவின் போது ஏர்வாடி தர்காவை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் முத்தரையர் சமுதாய மக்கள் கடல் நீரை தலையில் சுமந்து வந்து ஏர்வாடி தர்காவை சுத்தம் செய்வது, அடி மரம் நடுவது, கொடியேற்ற ரதம் கொண்டு வருவது, சந்தனக் கூட்டினை ஏர்வாடியில் இருந்து தர்காவுக்கு கொண்டு வருவது போன்ற பணிகளை முத்தரையர் சமுதாய மக்கள் கடைப்பிடித்து வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு அதற்கான உரிமை மறுக்கப்பட்டதாகவும், தங்களது பாரம்பரிய உரிமையை மீட்டு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி ஏர்வாடி தர்காவை சுற்றியுள்ள சின்ன ஏர்வாடி, சடை முனியன் வலசை உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த முத்தரையர் சமுதாய மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.. தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்