வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

உசிலம்பட்டி அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-19 18:45 GMT

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பைகள் எரிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாயக்கணூர் அருகே கட்டப்பட்டுள்ள உரக்கிடங்கில் தேக்கி வைத்து அந்த குப்பைகளை உரமாக்கும் பணி செய்யாமல் குப்பைக்கு தீ வைத்து எரியூட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் புகை காரணமாக தொற்று நோய் ஏற்படுவதாக குற்றம் சாட்டி உத்தப்பநாயக்கணூர், உ.வாடிப்பட்டி கிராம மக்கள் உரக்கிடங்கில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் குப்பைகள் கொட்டுவதற்கு இடமின்றி நகராட்சி நிர்வாகத்தினர் தவித்து வரும் சூழலில், கடந்த நான்கு நாட்களாக நீடித்து வரும் இந்த சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

அதன்படி உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களுடன் உசிலம்பட்டி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகராட்சி நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையிலான குழுவினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கிராம மக்கள் குப்பைகள் கொட்டி எரியூட்ட கூடாது என்றும், நகராட்சி குப்பையை கிராம பகுதிக்கு கொண்டு வரக்கூடாது என்பதை வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கான பெண்கள் உசிலம்பட்டி வருவாய் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், நகர் மன்ற தலைவர் சகுந்தலா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் ஜூன் 1-ந் தேதி வரை அங்கு குப்பைகள் கொண்டு வரப்படமாட்டாது. மேலும் உசிலம்பட்டி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சேகரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று பிரித்து அந்த பகுதியில் மாசு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்