மீன்களுடன் கலெக்டர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை

பாலை மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரி பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-08 18:45 GMT

பாலை மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரி பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

முற்றுகை

பாம்பன் ஊராட்சி சின்னப்பாலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்களும், மீனவ பெண்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரளாக வந்து முற்றுகையிட்டனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பாம்பன் ஊராட்சிக்குட்பட்ட சின்னபாலம், நடுத்தெரு, தோப்புக்காடு, தெற்குவாடி உள்ளிட்ட பகுதியில் 3 தலைமுறைகளாக பாலை மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறோம். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடலில் நீர் பெருக்கு ஏற்படும் போது கடல்நீர் 2 கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பரப்புக்கு வரும். அங்கு ஏற்கனவே தேங்கி உள்ள மழைநீர் குட்டையில் கடல் நீர்சேரும்.

அப்போது கடல்நீருடன் பாலை மீன் குஞ்சுகள் வந்து நன்னீரில் கலந்து உப்புதன்மை குறைந்ததும் வளர்ந்துவிடும். மீண்டும் கடலுக்கு செல்ல முடியாத நிலையில் அந்த மீன்குஞ்சுகளை நாங்கள் பிடித்து மீன்பண்ணைகளிலும், இரால் பண்ணைகளில் வளர்க்க விற்பனை செய்து வந்தோம். இதற்காக எங்களுக்கு ஏஜென்டுகள் குறைந்தபட்ச கூலி கொடுத்து வந்ததால் சமீப காலமாக நாங்களே பிடித்து விற்பனை செய்து வந்தோம்.

அனுமதி வேண்டும்

இதனால் பாதிக்கப்பட்ட ஏஜென்டுகள் மீன்வளத்துறையினரிடம் கூட்டு சேர்ந்து எங்களை பாலை மீன்பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். ஆனால் திருப்புல்லாணி, சேதுக்கரை, ஏர்வாடி, இதம்பாடல் உள்ளிட்ட பகுதிகளில் கேரளாவை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக பாலை மீன் குஞ்சுகளை பிடித்து சென்று வருகின்றனர்.

இவற்றை அதிகாரிகள் தடுப்பதில்லை. இதில் முறைகேடு நடப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பாரம்பரிய மீனவர்கள் பாலை மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

குடிநீர் கேட்டு முற்றுகை

அதேபோல் கமுதி அருகே உள்ள எம்.புதுக்குளம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று கலெக்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை. காவிரி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. நாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் குடிநீர் வாங்குவதற்கே காலியாகி விடுகிறது. எனவே, எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனக்கூறினர். இதுதொடர்பாக அனைவரும் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க முயன்றனர். அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு எற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்துஅழைத்து சென்றனர். இதேபோல, ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி தென்றல்நகர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வசதிசெய்து தரக்கோரி மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்