விழுப்புரத்தில்வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகள் பூட்டி சீல் வைப்புநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரத்தில் வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
வாடகை பாக்கி
விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான 440 கடைகள், வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளின் வியாபாரிகளிடம் மாதந்தோறும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை தவறாமல் செலுத்தும்படி நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
இருந்தபோதிலும் பல கடைகளின் வியாபாரிகள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். அந்த வகையில் 320 கடைகள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தை செலுத்தாமல் ரூ.1 கோடியே 4 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளன. இந்த வாடகை பாக்கியை விரைவில் செலுத்தும்படியும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
2 கடைகள் பூட்டி சீல் வைப்பு
இந்நிலையில் நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம், திரு.வி.க. சாலை, நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் வாடகை பாக்கியை வசூல் செய்யும் பணியில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் நகராட்சி வருவாய் அலுவலர் ரவி, வருவாய் ஆய்வாளர் பாபு, உதவியாளர்கள் குமரவேல், பாலு ஆகியோர் ஈடுபட்டனர்.
இதில் பழைய பஸ் நிலையத்தில் 7 மாதமாக வாடகை பணம் செலுத்தாமல் ரூ.2 லட்சத்து 78 ஆயிரத்து 362 பாக்கி வைத்திருந்த டீக்கடை, பிரியாணி விற்பனை கடை ஆகிய 2 கடைகளை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும், எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை பாக்கியை உடனடியாக செலுத்தி நகரின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.