8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-09-15 18:45 GMT


குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டை காலனியை சேர்ந்தவர் ராஜி. இவரது மகன் விக்னேஷ் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த 13 வயதுடைய மாணவி, அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 13.12.2020 அன்று சிறுமியின் பெற்றோர் வெளியூர் சென்றதால், மாணவி அதே பகுதியில் வசிக்கும் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தாள்.

இந்த நிலையில் 14.12.2020 அன்று மாலை மாணவி, அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அப்போது விக்னேஷ், மாணவியை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். பின்னர் மாணவியை அருகில் உள்ள சவுக்கு தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது

இதுபற்றி மாணவி, தனது பெரியம்மாவிடம் கூறி கதறி அழுதாள். தொடர்ந்து அவர், வெளியூர் சென்றிருந்த மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனே அவர்கள் விரைந்து வந்து, மாணவியிடம் விசாரித்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி நெய்வேலி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செது விக்னேசை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

20 ஆண்டு சிறை

இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட விக்னேசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அரசின் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்