தாய் வாங்கிய கடனை செலுத்தாததால் மாணவிக்கு பாலியல் தொந்தரவு; சென்னை டிரைவர் கைது

தாய் வாங்கிய கடனை செலுத்தாததால் திருச்சி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, சென்னை டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-10 19:01 GMT

திருச்சி,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 51). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு பெண்ணுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ரூ.5 லட்சம் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் அவரால் அந்த பணத்தை செலுத்த முடியவில்லை. இதையடுத்து கருணாநிதி கடனை கேட்டு அந்த பெண்ணை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது..

இந்தநிலையில் அந்த பெண்ணின் 17 வயது மகளுக்கு போன் செய்து, 'உன் தாய் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் உனது தாயை கொன்று விடுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியை ஒரு லாட்ஜூக்கு வரச்சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை கருணாநிதி செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை வைத்துக்கொண்டு சிறுமிக்கு தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

கைது

தற்போது அந்த சிறுமி திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இதனை அறிந்து கொண்ட கருணாநிதி மீண்டும் அவரது செல்போனுக்கு வீடியோ அனுப்பி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து அந்த மாணவி 1098 போன் செய்து குழந்தைகள் நலக்குழு மூலமாக கடந்த 6-ந்தேதி திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீசார் சென்னை சென்று நிதி நிறுவனத்தில் இருந்து போன் செய்வது போல் கருணாநிதியை தொடர்பு கொண்டு அவரது வீட்டின் அருகே உள்ள ரெயில்வே நிலையத்திற்கு வர செய்தனர். பின்னர் போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்