சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நாலாட்டின்புத்தூர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் அருேகயுள்ள லிங்கம்பட்டி புதுக்காலனி அண்ணாநகரைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் தர்மதுரை (வயது 24). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவனிடம் ரூ.100-ஐ கொடுத்து கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டு, உனக்கு மிட்டாய் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து கடைக்கு சென்ற சிறுவன் சிகரெட் மற்றும் மிட்டாய் வாங்கி கொண்டு தர்மதுரையின் வீட்டிற்கு சென்றான். அங்கு அவரிடம் சிகரெட் மற்றும் மீதிப்பணத்தை கொடுத்து விட்டு தனது வீட்டிற்கு செல்ல முயன்ற சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து தப்பிய சிறுவன், இதுகுறித்து, தனது பெற்றோரிடம் தெரிவித்தான்.
அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுதொடர்பாக நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி தர்மதுரையை தேடி வந்தனர். இந்நிலையில் அவர், அங்குள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்துள்ளார். அப்பகுதிக்கு நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயக்குமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்சாம்ராஜ், ஜெயக்குமார் ஆகியோர் சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.