கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை:விசுவ இந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?- மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விசுவ இந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2023-09-26 00:39 GMT


திருச்சி துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

என் கணவர் இறந்துவிட்டார். 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். மிகவும் வறுமையில் உள்ளதால் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலையில் துவரங்குறிச்சியில் உள்ள விசுவ இந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டியன் என்பவரது வீட்டில் வேலை செய்தபோது எனது சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு என்னிடம் அடிக்கடி தவறாக நடந்து கொண்டதோடு, தொடர்ந்து பாலியல் தொல்லையும் கொடுத்தார். அவரது இந்த செயல்கள் குறித்து தகவல்கள் வெளியான பின்னர், குருநாதன் என்பவர் என்னை தொலைபேசியில் அழைத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், உயர் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி நாகார்ஜூனா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் குறித்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, மனுதாரர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டு என்பது மிகவும் தீவிரமானது. அவரின் புகார் குறித்து ஏன் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.

அப்போது, இந்த புகாரின் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், இந்த கோர்ட்டு புதிதாக உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்