பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி

திண்டிவனம் அருகே அரசு பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2023-04-21 18:45 GMT

திண்டிவனம்

அரசு உயர்நிலைப்பள்ளி

திண்டிவனம் அருகே உள்ள ஒரு அரசு உயா்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சகலகலாதரன்(வயது 59). நேற்று மாலை 9-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி, தலைமை ஆசிரியரின் அறைக்கு நோட்டு வைக்க சென்றார்.

அப்போது அங்கிருந்த தலைமை ஆசிரியர் மாணவியின் கையைப்பிடித்து சாக்லெட் கொடுத்தார். ஆனால் அதை வாங்க மறுத்ததால் அவரை வற்புறுத்தி சாக்லெட்டை மாணவியின் சீருடையில் உள்ள பாக்கெட்டில் வைத்ததாக கூறப்படுகிறது.

பெற்றோரிடம் கூறி அழுதார்

இதனால் அதிர்ச்சி அடைந்து அறையில் இருந்து வெளியே ஓடி வந்த மாணவி வீ்ட்டிற்கு சென்று பள்ளியில் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதார். உடனே மாணவியின் உறவினர்கள், கிராம மக்களுடன் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே இதை அறிந்த ரோசனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தலைமை ஆசிரியரை தனி அறையில் வைத்து விசாரித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்வதற்காக அறையில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அங்கே நின்ற பொதுமக்கள் தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதனால் நிலைகுலைந்து போன போலீசார் அவரை பொதுமக்களின் பிடியில் இருந்து மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

முற்றுகையிட முயற்சி

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு தாக்க முயன்றனர். போலீசார் கடுமையாக எச்சரித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதன் பின்னர் பலத்த பாதுகாப்புடன் தலைமை ஆசிரியரை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது

இதுகுறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமையாசிரியர் சகலகலாதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்