கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது

விழுப்புரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என்று கலெக்டர் பழனியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-03-21 18:45 GMT

விழுப்புரம் சாலாமேடு காவலர்கள் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாங்கள் வசிக்கும் பகுதியில் தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப் பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் நிலத்தடி நீரும் மாசடையும் அபாயம் உள்ளது. இந்த நீரை ஆழ்துளை கிணறு மற்றும் கைப்பம்பு மூலம் பெற்று பயன்படுத்தும் போது எங்களுக்கு தொற்று நோய் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

நடவடிக்கை

இதை தவிர்க்க குடியிருப்பு பகுதியில் இதுபோன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்