பூந்தமல்லியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி - தொற்று நோய் பரவும் அபாயம்

பூந்தமல்லி நகராட்சி 7-வது வார்டு பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-08-15 09:38 GMT

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் பூந்தமல்லியில் மட்டும் 103 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் பூந்தமல்லி நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட முல்லா தோட்டம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழைநீரோடு அதிக அளவு கழிவுநீர் கலந்து இருப்பதால் அங்கு பெரும் துர்நாற்றம் வீசி வருவதுடன், அங்குள்ள வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீரை பொதுமக்கள் பாத்திரத்தில் எடுத்து வெளியே ஊற்றும் நிலை உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து செல்லும் சூழல் உள்ளது.

எப்போது மழை வந்தாலும் இந்த பகுதி முதலில் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தற்போது மழை நீரோடு அதிக அளவில் கழிவுநீர் கலந்திருப்பதால் இந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே மழை நீரோடு தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்