மக்கள் நீதிமன்றத்தில் 187 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 187 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-07-22 18:33 GMT

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த அரசாணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் உத்தரவின்பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன், இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கி நடத்தினார். இதில் 187 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்றும், மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்த பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) வேலுமணி மற்றும் தேவகி ஆகியோர் கூறினர். இந்த மக்கள் நீதிமன்றத்தில் அரசு வக்கீல்கள் மோகன்ராஜ், செந்தில்குமார் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்